‘புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை’ வெளியுறவு அணுகுமுறை வெளியீடு!

பெக்டம் சிந்தனைக் கொத்து நிறுவனத்தினால் “புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” என்னும் பெயரிலான வெளியுறவு அணுகுமுறை வெளியிடும் நிகழ்வு நேற்று (19) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்றது.

இதன்போது, நூலின் எழுத்தாளரான உதித தேவப்பிரியவினால் நூலின் பிரதி, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

பெக்டம் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆலோசகருமான கலாநிதி ரங்க கலன்சூரிய, நாட்டின் ஒன்பது மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் நடத்தப்பட்ட ஆலோசனை செயலமர்வுகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான நேர்க்காணலின் தகவல்களை அடிப்படையாக கொண்டு நூல் எழுதப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இராஜதந்திர சேவை உறுப்பினர்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளுடன் எழுத்தாளர் கலந்துகொண்ட நேர்காணல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.

இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய சகலரும் 30 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பது சிறப்பம்சமாகும். அவர்கள் இலங்கையின் 09 மாகாணங்களையும் உள்வாங்கும் வகையிலான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமான நாடு என்ற நோக்கத்திற்கு இணங்கிச் செயற்படுவோர் எனவும் ரங்க கலன்சூரிய சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வெளிவிவகார கொள்கைக்கு இணையான கலந்துரையாடலின் முக்கியமான மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் நாட்டின் எதிர்காலத்திற்கான மூலோபாய மார்க்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதை இந்த நூல் உறுதிப்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டலுவல்கள் பதில் அமைச்சர் தாரக பாலசூரிய, முன்னாள் அமைச்சர்களான சரத் அமுனுகம, ரவி கருணாநாயக்க, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவலிகே வன்னில எத்தோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் (சர்வதேச ஊடகங்கள்) செனுகா செனவிரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *