தபால் திணைக்கள ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அஞ்சல் தொலைத்தொடர்பு சேவையாளர் சங்கம்,அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கம் என்பன இணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்தது.

அந்த வகையில் மட்டக்களப்பு தபால் திணைக்களத்திற்கு முன்னால் தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த வருடம் அமைச்சரவையில் தபால் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த விடயங்களைத் தபால் திணைக்களத்தின் ஊடாக இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வெற்றிடங்களையும் உரிய முறையில் நிரப்ப வேண்டும், அமைச்சர் உறுதி அளித்த விடயங்களை உடன் நிறைவேற்ற வேண்டும், பதவி உயர்வுகளுக்குக் காலம் தாழ்த்தாது உடன் வழங்க வேண்டும், தபால் திணைக்கள புதிய நியமன முறையை உடன் அமல்படுத்த வேண்டும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் 16ஆம் திகதி நள்ளிரவு முதல் 18ஆம் திகதி நள்ளிரவு வரையான காலப் பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தினை நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் இவ்வார்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *