இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு:

இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கைக்கு இந்தியாவின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 1032 கோடியாகும்.

இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்திய வரவு செலவு திட்டத்தில் வௌிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில்  பூடான் நாட்டுக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டுக்காக 2025-26ம் ஆண்டுக்காக 2,150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *