ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூர் நகர நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூர் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு ஆணை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், “27 கிலோ தங்கம், வைர, வெள்ளி நகைகள் மற்றும் 1,562 நிலப்பத்திரங்களை எதிர்வரும் பெப்ரவரி 14, 15 ஆம் திகதிகளில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அன்றைய தினம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார், நகைகளை எடுத்துச் செல்ல 6 பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய ஒளிப்பதிவாளர்கள் வர வேண்டும்.கர்நாடக அரசு உரிய பாதுகாப்புடன் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004 இல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *