யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மாவை சேனாதிராஜா இன்று (29) காலமானார்.
குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.
யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, அவர்கள் தனது ஆரம்ப கல்வியை மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியிலும் கற்றார்.
தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.
அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.
1977 இல் மாவை சேனாதிராஜா ‘பவானி’ என்பவரை திருமணம் செய்தார்.
மேலும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.
1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் 6 தசாப்த்தங்களாக கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.