கடந்த 24 மணித்தியாலங்களில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் மேலும் தெரிவக்கையில், “பண்டிகை காலம் என்பதால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பாதசாரிகளும் அதிகளவில் செல்கின்றனர். பாதசாரிகள் வீதியில் நடந்து செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் சாரதிகளும் மிகக் கவனமாக வீதியில் ஓட்ட வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இவ்வருடம் வீதி விபத்துக்களில் 2,243 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 22,967 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 2,141 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அக்காலப் பகுதியில் வீதி விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,552 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.