3 நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸ்சனாயக்காவிற்கு, டில்லி விமான நிலையத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவரை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்.
அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை எனும் இந்தியாவின் கொள்கை குறித்தும், பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி எனும் இந்தியாவின் கண்ணோட்டத்தில் இலங்கையின் குறிப்பிடத்தக்க பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்புகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அநுரகுமார திஸநாயக்க, “எனது அதிகாரபூர்வ இந்திய பயணத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்திய – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுலா மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளை முன்னேற்றுதல் ஆகியவற்றில் எங்கள் உரையாடல் கவனம் செலுத்தியது.
இந்த ஈடுபாடுகள் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன”என தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற அநுரகுமார திஸநாயக்கவுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஒன்றிணைந்த பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.