பிரிந்து நின்று வாக்குகளை சிதறடிக்காமல் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்: வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, தமிழ் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல்போகும் அபாயம் உள்ளதால், தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (04) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை தெரிவித்த வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, மேலும் தெரிவிக்கையில்,

நிலையான, கௌரவமான உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி எமது வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, 2022 ஆம் ஆண்டு சமஷ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டிருந்தது.

இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டுவரும் அரச இனவாத அடக்குமுறையிலிருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம். எமது வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் தேசியப் பரப்பிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் தலைமைகளுக்கு ஓர் பகிரங்கமான கோரிக்கையை முன்வைக்கிறது.

இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போகும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், கட்சி ரீதியாக தனித்து போட்டி இடாமல் ஓர் கூட்டாக அல்லது கூட்டணியாக தேர்தலில் போட்டியிட்டு வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அதிக மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக இணையாத சந்தர்ப்பத்தில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதுடன், குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை இழக்க வேண்டி நேரிடும் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *