நாட்டை வங்கேரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷ தரப்பினர் ரணிலோடு இணைகின்றனா் – சஜித்!

நாட்டை வங்கேரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஹங்குராங்கெத்தையில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்…

”இன்று பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும் திருடர்களுடன் டீல் போட்டுள்ளனர்.

ராஜபக்சக்களுடன் கைகோர்த்து அரசியல் செய்தவர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதியுடன் கைகோர்த்து வருகின்றனர்.

மக்களே இவர்களின் முகங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அடைக்கலம் தேடியே ரணிலோடு இணைகின்றனர்.

ராஜபக்ச தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியிலும் இந்த திருடர்களுக்கு இடமில்லை.

மாளிகை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்த நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளிகள், அரசு ஊழியர், நடுத்தரக் குடும்பங்களின் பிள்ளைகள் சர்வதேச தரத்திலான தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கு வழிவகை செய்வோம்.

ஐக்கிய மக்கள் சக்தி இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றேன்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *