கணணி அறிவில் கிழக்கு மாகாணம் அடிபட்ட நிலையில்!

நாட்டில் கணணி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வயது மற்றும் தொழிற்றுறை முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணினி அறிவு தொடர்பில் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஆண்களின் கணினி அறிவு 40.9 சதவீதமாகவும், பெண்களின் கணினி அறிவு 37.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு வீதம் 79.4 சதவீதமாக காணப்படுகிறது.

அத்துடன், 5 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 63.5 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. ஆண்களின் டிஜிட்டல் அறிவு 65.9 சதவீதமாகவும், பெண்களின் டிஜிட்டல் அறிவு 61.3 சதவீதத்தாலும் உயர்வடைந்துள்ளன. இதற்கமைய 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 93.8 சதவீதமாக காணப்படுகிறது.

எழுமாற்றாக 100 நபர்களில் 51 பேர் இணைய பாவனைகளில் ஈடுபட்டுள்ளதுடன்,19 பேர் மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களாக காணப்படுகின்றனர். தொழில்வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் மத்தியில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு 82.7 சதவீதமாகவும், 25 முதல் 29 வயதுக்குட்டவர்களின் கணினி அறிவு 83.7 சதவீதமாகவும் காணப்படுகிறது.

மாகாண மட்டத்திலான தரப்படுத்தலில் மேல் மாகாணம் 33.55 சதவீதமளவில் கணினி அறிவில் உயர்வான நிலையிலும், கிழக்கு மாகாணம் 8.6 சதவீதமளவில் குறைவான நிலையிலும் காணப்படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *