தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நீதிவான் நீதிமன்ற கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளையும் அவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் எனும் குற்றத்துக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வழங்கப்பட்ட கட்டளைகளால் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யப்பட்டு மயிலிட்டி துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இக்கட்டளைகளுக்கு எதிராக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்குகள் படகு உரிமையாளர்களால் தொடரப்பட்டன. இவ்வழக்கில் படகு உரிமையாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அந்த கட்டளைகளை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இரத்து செய்து கட்டளையாக்கியுள்ளது.
தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளையும் கடற்றொழில் உபகரணங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான உரிமைக் கோரிக்கையை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 03 மாத காலத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு படகு உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜனுடன் சட்டத்தரணிகள் சாரா ஹரிபிரவீன், சபிஷாந்த் மோகன் முன்னிலையானதும் எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.