இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவிப்பு!

காசாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாலும், இஸ்ரேலால் ஏற்படும் பாதிப்புகள் நீடிப்பதாலும் இஸ்ரேலுடனான தனது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டதாக துருக்கி அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை தடை செய்த துருக்கி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனானஅனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்கின்றன.

மேலும், இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது.

இஸ்ரேலிய அரசாங்கம் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி போதுமான அளவில் வழங்க அனுமதிக்கும் வரை இந்த புதிய நடவடிக்கைகளை அரசு செயற்படுத்தும் என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ள இஸ்ரேல், தற்போது தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் உட்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என தெரிவித்து, போரை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையிலேயே, காசாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாலும், இஸ்ரேலால் ஏற்படும் பாதிப்புகள் நீடிப்பதாலும் இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *