ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளர்: விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவன செய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்க வேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.

வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம்.

அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது.

தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு.

பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *