சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து 15 முறை அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டுமுறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதால், அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.