பாகிஸ்தானில் பொலிஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 23 வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பொலிஸ் வளாகத்திற்குள் வெடிப் பொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக தேரா இஸ்மாயில் கான் மாவட்ட வளாகத்திற்குள் தீவிரவாதிகள் சிலர் நுழைய முயற்சித்துள்ளனர்.
ஆனால் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெடிப்பொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை வளாகத்தின் சுவர் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் வளாகத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிமருந்துகளும் இந்த தாக்குதலில் வெடித்து இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த தாக்குதலின் போது உறங்கி கொண்டு இருந்த பலர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இந்த பொலிஸ் வளாகம், பாகிஸ்தான் ராணுவத்தால் அடிப்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த திடீர் தாக்குதல் நடத்திய 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பின் இரவு முழுவதும் நடந்த ராணுவ நடவடிக்கையில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்த சம்பவத்தில் மொத்தமாக 23 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளது.