2024 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை திட்டத்துக்கான பணிப்பாளர் டகாஃபுமி கடானோ (Takafumi Kadono) இதனைத் தெரிவித்துள்ளார்.
500 மில்லியன் முதல் 600 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியை இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த தொகை, நிபந்தனைகளின் அடிப்படையில் மீள பெறப்படும் எனவும் இது நன்கொடை அல்லவெனவும் டகாஃபுமி கடானோ ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான நான்கு வருட கடன் வேலைத்திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முதல் மதிப்பாய்வு அடுத்த வாரம் உலகளாவிய கடன் வழங்குநரால் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாவது தவணையாக சுமார் 334 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.