அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள பல பில்லியன் ரூபா வரியை செலுத்தத் தவறிய டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனம் உட்பட 05 பாரிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை இரத்து செய்யவுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனங்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் உரிய வரிகளை செலுத்தவில்லையெனில் உரிமங்கள் இரத்து செய்யப்படுமென்றும் நேற்று (13) அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தத் தவறிய பத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை உடனடியாக இடைநிறுத்தக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட போது, கலால் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இதனைத் தெரிவித்தார்.
பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பர்னாந்து ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்களை ஜனவரி 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. எம்.எம் சஞ்சய் மஹவத்த, சுசந்த ரஞ்சித் லியனாராச்சி உள்ளிட்ட 17 பேர் சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதி அமைச்சின் செயலாளர், டபிள்யூ. M. Mendis and Company, Royal Distilleries Private Company மற்றும் ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்கள் இங்கு பிரதிவாதிகளாக உள்ளன.
அரசின் வருவாயை வரி மூலம் அதிகம் வசூலிக்க அரசு எப்போதும் எதிர்பார்ப்பதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். மேலும் மது உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டு உரிமம் வழங்கப்பட்டு மது வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.