2024 ஜனாதிபதிதேர்தலும், தமிழ்மக்கள்முன்உள்ளதீர்வும்:

இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாகவும், வித்தியாசமாக அதிக எண்ணிக்கையானோர் போட்டியிடும் தேர்தலாகவும் இத் தேர்தல் அமைந்துள்ளது.

புவிசார் அரசியலில் முக்கிய அமைவிடத்தில் உள்ள இலங்கை மீதான உலக நாடுகளின் கவனம் அதிகரித்துள்ள இச் சூழலில் நாளை (21) நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.  அது மட்டுமன்றி இலங்கை தீவில் தமக்கான ஆதரவு நிலையை உறுதிப்படுத்துவதிலும், ஆட்சியாளர்களை தமக்கு சாதகமானவர்களாக நியமிப்பதிலும் கூட உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதை அவதானிக்கமுடிகிறது. 

இந்த நிலையில் 39 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மிகவும் முக்கிய நபர்களாக இலங்கை வாழ் மக்களால் மட்டுமன்றி உலக நாடுகளாலும் பார்க்கப்படுபவர்கள் நால்வர் (ரணில், சஜித், அனுரகுமார, அரியனேந்திரன்) மட்டுமே. அதிலும் ஆட்சி அதிகாரத்தில் அமரக்கூடியவர்களாக கருதப்படுபவர்கள் இருவர் மட்டுமே. 

இந்த நிலையில் தான் இலங்கையை தாண்டி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது தமிழ் பொது வேட்பாளர் விடையம். தாம் விரும்பும் நபரை வெற்றிபெறச் செய்ய இந்த தமிழ் பொது வேட்பாளர் தடையாக உள்ளதாக உணரும் சில நாடுகளினால் போட்டியில் இருந்து விலகுமாறு மறைமுக அச்சுறுத்தலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது.  அதையும் தாண்டி தமிழ் தேசமாய் மக்கள் திரண்டு பெரும் ஆதரவை தமிழ் பொது வேட்பாளருக்கு வழங்கிவருவது கண்டு தென்னிலங்கையும், சர்வதேசமும் வியப்பில் உறைந்துள்ளது.

அடக்கு முறைகள் நிறைந்த இலங்கை தீவில் பெளத்த மதத்தை சேர்ந்த சிங்களவர் அல்லாத எவரும் ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதே இலங்கையில் எடுதப்படாத சட்டமாக இருந்துவருகிறது. இவ்வாறான சூழலிலும் தமிழர்களின் தனுத்துவத்தையும், பலத்தையும் பறைசாற்றி நிற்கவேண்டிய காலத்தின் கட்டாயத்திற்கு இன்று தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. இதன் அடிப்படையில் பெருகிவரும் தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவானது கணிசமான வாக்குகளை குவிக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் தமிழ் சமூகத்தின் இன்னோர் பகுதியான முஸ்லீம் மக்களின் வாக்குகள் சஜித்தின் பக்கமே அதிகமாக இருப்பதையும் காண முடிகிறது. அவ்வாறு இல்லாது முஸ்லீம் சமூகமும் ஒன்றாகி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்குமானால் அது பெரும் வெற்றியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும் இலங்கைத்தீவில் பெரும் தாக்கத்தையும், திருப்பத்தையும் உண்டுபண்ணும் என்பது திண்ணம். 

எது எவ்வாறு எனினும் நான்கு தசாப்தங்களாக தமிழினத்தை அடக்கி, ஒடுக்குவதிலும், தந்திரமாக சூழ்சிகளினூடு தமிழர் தரப்பை பிரித்தாளுவதிலும் தன் வகிபாகத்தை முன்னிறுத்தி செயற்பட்டவரும், தமிழீழ விடுதலை போராட்டத்தின் துயர் தோய்ந்த முடிவிற்கும், தமிழின அழிப்பிற்கும் காரணமான ரணில் விக்கிரமசிங்க வென்றுவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக செயற்படவேண்டும்.  அதுவே சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் வழங்கும் தக்க பதிலாகவும் அமையும். ஆதலால் நன்கு சிந்தித்து உங்கள் வாக்குகளை செலுத்தவேண்டியது ஒவ்வொரு தமிழரதும் கடமையாகும். 

தமிழினத்தை இஅன அழிப்பு செய்து தமிழர் நிலங்களையும் அபகரித்து பெளத்த மயமாக்கலில் முழுமூச்சாக செயற்பட்ட ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆட்சியும், அதிகாரமும் 2022 மக்கள் புரட்சியோடே தகர்க்கப்பட்டுவிட்டது. இதன் பின்னணியில் சில உலக நாடுகளின் உளவு அமைப்பும் இல்லாமல் இல்லை. தமிழீழ விடுதலை போராட்டத்தை அழிக்க ராஜபக்‌ஷக்களை வைத்து காய் நகர்த்திய அதே சர்வதேச நாடுகள் தம் காரியம் நிறைவேறியதும் உள் நாட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தி மக்கள் போராட்டமாக மாற்றி ஆட்சியை கவிழ்த்தும் இருந்தமை தெரிந்ததே. இதே போல் ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், அண்மையில் பங்களாதேசில் என பல நாடுகளில் நடப்பதை காணவும் முடிகிறது. 

இம் முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித்தா…/ அனுரகுமாரவா…? என்பதே இன்றுள்ள கேள்வியாக உள்ளது. இந்த இருவரில் ஒருவரை கொண்டுவருவதிலும் தான் உலக நாடுகளும் தமது நகர்வுகளை செய்துவருவதை காணமுடிகிறது.  ஆகையால் தென்னிலங்கையின் வாக்குகள் பிரிக்கப்பட்டு போகும் நிலை காணப்படுவதால் வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கப்போகும் நிலை உருவாகியுள்ளது. 

இந்த நிலையில் கட்சி, பேதங்களை கடந்து நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டிய நிலையில் உள்ள தமிழ் மக்கள் தமது ஜனநாயக கடமையை சரிவர செய்து தமிழர் பலத்தை உறுதிப்படுத்தவேண்டியது போரில் கொல்லப்பட்ட மக்களுக்கும், தம் உயிர்களை தியாகம் செய்த போராளிகளுக்கும் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.  – இளங்குமரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *