11 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம்: சட்டமா அதிபர்

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சிறை அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குறித்த சம்பவத்தில், இறந்த கைதிகள் சுடப்பட்ட விதம், கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகவோ அல்லது மனிதாபிமான நடவடிக்கைக்காகவோ சுடப்பட்டதாகத் தெரியவில்லை என குறிப்பிட்ட நீதவான், இது ஒரு குற்றமாகும் என தெரிவித்ததோடு, குறித்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிறைச்சாலை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றம் இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்துள்ள போதிலும், மஹர சிறைச்சாலையில் உள்ள 11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மேலும், சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 77ஆவது பிரிவின் பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்,  இது சம்பந்தமான சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோப்பினை மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *