முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பிரதேசத்தில் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்று சனிக்கிழமை (14) வெள்ளை வேனில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதில், பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தருக்கும் இடையில் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளை வேனில் சென்ற கும்பல், முல்லைத்தீவு பொலிஸ் என கூறி இந்த குடும்பஸ்தரை அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்று தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஊற்றங்கரை வீதி தண்ணீரூற்று முள்ளியவளையை சேர்ந்த 44 வயது நபர், படுகாயமடைந்த நிலையில் அவரது உறவினர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபரிடம் வாக்குமூலத்தை பெற்று, மேலதிக விசாரணைகளில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.