வெடுக்குநாறி ஆலய சம்பவம்; கைதான 8 பேருக்கும் விளக்கமறியல்:

நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றிரவு (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் இன்று (09) மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி. திருஅருள், அ. திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்ற வேளையில், மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், பொலிஸாரின் கட்டளையை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு, அங்கு குவிக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனையும் பொலிசார் கைது செய்ய முயன்ற நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் விட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *