வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வெளிநாட்டு அரசமுறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.
2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும். அத்துடன் நாட்டின் பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும். புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் வற் வரி நீக்கப்படும். எனினும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணங்களை வழங்கமுடியாது. ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள்.மக்கள் மீது தேவையில்லாமல் வரிச் சுமைகளை அரசாங்கம் சுமத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

எமது நாட்டில் பல அரசாங்கங்கள் கையாண்ட தவறான பொருளாதார கொள்கை காரணமாகவே நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை. நான் தைரியமாக அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்.
அப்போதைய சந்தர்ப்பத்தில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பின் ஊடாக இந்த நிலைமையை மாற்றியமைத்தோம்.
அதன் பயனை முழுநாடும் இன்று அனுபவிக்கின்றது.குறைந்த வருமானம் பெறும் 24 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் பெறுமதி சேர் வரியை மேலும் குறைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
பாடசாலை உபகரணங்கள் சுகாதார உபகரணங்கள் மருந்து பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *