வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், கூட்டத்தொடருக்கு முன்னதாக பேரவையின் உறுப்புநாடுகளுடனான சந்திப்பின் நிமித்தம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த செவ்வாய்கிழமை ஜெனிவா பயணமானார்.
அங்கு பிரிட்டனால் சுமார் 15 உறுப்புநாடுகளின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுமந்திரன், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விளக்கமளித்தார்.
குறிப்பாக பொறுப்புக்கூறல் செயன்முறைகளில் முன்னேற்றம் அடையப்படாமை, தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் காலதாமதம், வட-கிழக்கு மாகாணங்களில் தொடரும் நில அபகரிப்பு, குருந்தூர்மலை மற்றும் தையிட்டி உள்ளடங்கலாக தமிழ்மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக அண்மையகாலங்களில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளரும், இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான த்யாகி ருவன்பத்திரணவும் கலந்துகொண்டிருந்தார்.
அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவின் தலைவர் ரோரி மங்கோவனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றது. இதன்போது இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்தும், இலங்கை விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் (பேர்ள்) அமைப்பின் பிரதிநிதியையும் சந்தித்த சுமந்திரன், அவரிடம் நாட்டின் சமகால நிலைவரங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.