வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’ தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை(19) இடம்பெற்றது.
யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார்.
ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் – திட்டமிடல் எம்.கிருபாசுதன், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் – பொறியியல் சேவைகள் எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆளுநரின் செயலாளர், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கை ஆளுநர் ஒழுங்கு செய்திருப்பதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் எம்.கிருபாசுதன் மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் சுருக்க விளக்கத்தை முன்வைத்தார். அதன் பின்னர் வளவாளர் கலாநிதி வி.நவநீதனால் பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அபிவிருத்தி மற்றும் திட்டமிடலுடன் தொடர்புடையதாகப் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர்.