யாருக்கு ஆதரவு வழங்குவது – தமிழரசுக் கட்சியின் முடிவு வெளியானது:

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என தமிழரசுக்கட்சி ஒன்றுகூடி நடாத்திய கலந்துரையாடிலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சயின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (11) தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் சார்பாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சியினுடைய  நிலைப்பாடானது இணைந்த வடகிழக்கிலே சமஸ்தி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறை ஏற்படுத்தப்படுவதாகும்.

இதுவே எங்களுடைய அரசியல் நிலைப்பாடு.  இதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் யாராவது இணங்கி வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் கூட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. எனினும் இது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. 

எமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாம் கூறி இருப்பதானது, அவர்களுடைய அரசியல் அறிக்கையில் எவ்வாறான செய்தியை சொல்கிறீர்கள் என்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இது தொடர்பில் முழு நாட்டிற்கும் அவர்கள் எண்ணத்தை சொல்ல வருகிறார்கள் என்பது தொடர்பிலும் நாங்கள் பார்க்க இருக்கிறோம். 

எமது கோரிக்கைகளை ஏற்றால் அது தொடர்பில் விசேஷமாக சிங்கள மக்களுக்கு அவர்கள் தமிழர்களுக்கு எதைச் செய்யப் போகிறோம் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

இது தவிர நாங்களும் எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து வடிவில் தெளிவான ஒரு அறிக்கையாக வெளியிடுவோம். எங்களுடைய மக்களுக்கு மக்களுடைய அரசியல் தலைமைத்துவம் வழங்குகின்ற கட்சி என்ற நிலைபாட்டில் அவ்வாறான ஒரு பொறுப்பை நாமும் உதாசீனம் செய்யாமல் வழிகாட்டல் அறிக்கை ஒன்றை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *