பொதுமக்களுக்கு காணி உரிமம் வழங்கும் ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – ஒட்டகப்புலம் பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் 408 பேருக்கு 235 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு ஜே/244, வயாவிளான் மேற்கு ஜே/245 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தொடர்புடைய காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு நெருக்கடிகள் மிகவும் அதிகரித்துள்ளன என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தக் காணிகள் மக்களால் முற்றுமுழுதாகப் பயன்படுத்த வேண்டுமாயின், இராணுவ முகாமின் எல்லையை நகர்த்த வேண்டும்.
ஆனால் இன்னமும் இராணுவத்தின் பாதுகாப்பு வேலிகள் நகர்த்தப்படாத காரணத்தால், பொதுமக்கள் பிரதான வீதிக்குப் போக்குவரத்துச் செய்வதற்கு பெருமளவுதூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மாலை நேரத்துக்கு முன்னரே பொதுமக்கள் தமது நிலப்பகுதிகளை விட்டு வெளியேற்றப்படுவதாகவும், விவசாய நிலங்களில் தமது பாதுகாப்புக்காக தற்காலிகக் கொட்டகைகளைக்கூட அமைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.