யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை வியாழக்கிழமை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நாம் தீர்மானித்துள்ளோம்.

நாங்கள்  தொடர்ச்சியாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்களாக  கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையிலும், நோயாளர்களின் பாதுகாப்பை யாழ். போதனா வைத்தியசாலையினது நிர்வாகம் உறுதி செய்யத் தவறியமையால், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

பின்வரும் காரணங்களுக்காகவே நாம் எமது தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம்.

1. நோயாளர் அவசர சேவைகளுக்கான பிரிவுகளுக்கு ஆளணி பற்றாக்குறையாகவும் அதே நேரம் , சாதாரணபிரிவுகளுக்கு அதிகமான ஆளணியும் பொருத்தப்பாடற்ற விதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதனால் நோயாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் உள்ளது.

2. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக விபத்து, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு (ATICU) இல் ஒரு ஆபத்தான பணியாளரைப் பொறுப்பிலிருத்தி , அர்ப்பணிப்பான பணியாளரை இடம் மாற்றியுள்ளமை  நோயாளிகளின் உயிராபத்திற்கேதுவான பாதகமான நிலைமை நிலையை உருவாக்கியுள்ளது.

3. சில ஊழியர்களின் பொறுப்புணர்ச்சி அற்ற நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டியபோதும் அவர்களைத் திருத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மருத்துவ நிபுணர்களால் தகவல்கள் கோரப்படும் போது தவறான தகவல்களை வழங்குவதுடன் தகவல்களை வழங்குவதில் தாமதம் செலுத்துதல்.

5. மருத்துவமனையில்  ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து நோயாளிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொழிற்சங்க நடவடிக்கையாக,   அதிதீவிர சிகிச்சை தவிர்ந்த சாதாரண பணிகளையும் இடை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

இது நோயாளரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதனால்  நீண்டகால நோக்கிலான சரியான முடிவுகள்  எட்டப்படும் வரை  தொழிற்சங்க நடவடிக்கையைத்  தொடர வாய்ப்புள்ளது. இதனால்  யாழ். போதனா வைத்தியசாலையில்  அவசர சிகிச்சைகள் தவிர்ந்த  ஏனைய சிகிச்சைகள்  தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்  என்பதனை மன வருத்தத்துடன் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *