முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளஞ்சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக தமது கிராமத்தில் போதை பொருள் பாவணையால் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை உடனடியாக உரியவர்கள் கட்டுப்படுத்தி எமது இளம் சந்ததியினர் மற்றும் கிராம மக்களை பாதுகாக்குமாறு கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம், உழைத்து வாழப்பழகு ஊரை அழித்து வாழாதே, போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம், போதையால் ஊரை அழிக்கிராயே உன் சந்ததி மட்டும் நிலைத்து வாழுமா, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
அத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளுக்கு சென்ற மக்கள் அவர்களது வீட்டு வாசல்களில் பதாதைகளையும் காட்சிப்படுத்திவிட்டு சென்றிருந்தனர்.