மறைந்த மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளையினர் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்..
அமரர் திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா (மாவை சேனாதிராஜா) அவர்களின் திடீர் மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துடிப்புள்ள இளைஞ்ஞனாகவும், தமிழின இன உணர்வாளனாகவும் மாணவ பருவத்திலேயே துணிவோடு அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களில் பங்கேற்றவர். 1961 இல் முதன் முதலாக தந்தை செல்வா தலைமையிலான சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்ற மாவை அண்ணன் அவர்கள் அன்று முதல் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி வந்ததோடு பல போராட்டங்களையும் முன்னின்று நடாத்தியிருந்தார். அதன் பலனாக 1969 முதல் 1977 வரையான காலப்பகுதிக்குள் பல தடவைகள் ஶ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறைவாசத்திற்குள்ளானார்.
அதன பின்னரான காலத்தில் நேர்த்தியான வழியில் அரசியல் ரீதியாக மோத முடிவெடுத்து தன்னை ஓர் அரசியல் போராளியாக்கி அன்று முதல் தனது இறுதி மூச்சு நிற்கும் வரை தமிழ்ர்களின் விடிவிற்காகவும், கட்சிக்காகவும் அயராது உழைத்தவர் மாவை சேனாதிராஜா அண்ணா.
தமிழினத்துக்கு அவர் ஆற்றிய பணியும், தியாகமும், தலைமைத்துவமும் மறக்கமுடியாதவை. அப்படிப்பட்ட ஓர் அரிய மனிதனை இன்று இழந்திருப்பதானது இலங்கை தமிழரசு கட்சிக்கு மட்டுமன்றி தமிழர் தேசத்திற்கே பேரிழப்பாகும்.
இந்த வேளையில் அவர் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதோடு, ஆறுதல்களையும் வழங்கி நிற்கிறோம்.
மாவை சேனாதிராஜா அவர்களின் நினைவும், அவர் ஆற்றிய பணியும் என்றும் எம் மனதோடு நிலைத்திருக்கும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.