2009 இல், இலங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா ஐ.நா முன்றலில் தன் உடலுக்கு தீயிட்டு தியாக மரணமடைந்த “ஈகப்பேரொளி முருகதாசனுக்கு” பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று நினைவு வணக்க நிகழ்வு நடாத்தப்பட்டது.
ஈகப்பேரொளி முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடமான Holders hill road, london, NW7 1NB இல் அமைந்துள்ள நினைவுக் கல்லறையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், சரியாக மதியம் 12:00 மணிக்கு பொதுச்சுடரினை தேசிய செயற்பாட்டாளர் திரு.முருகானந்தம் அவர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஈகப்பேரொளி முருகதாசனின் கல்லறைக்கான ஈகச்சுடரினை திரு.சிவா அவர்கள் ஏற்றிவைக்க மலர் மாலையினை ஈகப்பேரொளி முருகதாசனின் பெற்றோர் அணிவித்தனர்.
அதையடுத்து 26 தியாகிகளுக்குமான ஈகச்சுடரினை திரு.யோகலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, மலர்வணக்க நிகழ்வு ஆரம்பமானது.
இன்றைய நிகழ்வானது ஈழ விடுதலைக்காகவும், தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் தியாக மரணமடைந்த ஏனைய 26 தியாகிகளின் உருவப்படங்களும் வைக்கப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் பெருமளவான மக்களும் வந்து கலந்துகொண்டு தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலிகளை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.