விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அணிந்த படி விஜய் நடந்து சென்றார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. வெற்றி வாகை என தொடங்கும் இப்பாடலில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடலை விஜயுடன் இணைந்து தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார்.
பின்னர் மக்களிடையே உரையாற்றிய விஜய், “பயமின்றி குழந்தை பாம்பை பிடிக்கும். இங்கு அந்த பாம்புதான் அரசியல். அதனை கையில் பிடித்து விளையாட போகும் குழந்தை தான் நான். அரசியலுக்கு நாம் குழந்தைதான் என்பது மற்றவர்களின் கமெண்ட். பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் கான்பிடண்ட். சிறுபிள்ளை பயமறியாது அரசியல் என்ற பாம்பை கையில் பிடித்து விளையாடுவோம்.
பாம்பாக இருந்தாலும் பாலிடிக்ஸ்சாக இருந்தாலும் கையில் எடுக்கும் போது சீரியசாக கொஞ்சம் சிரிப்போடு சேர்ந்து செயல்படுவது தான் நம்ம ரூட்டு. அரசியலில் நாம் கவனமாக களம் ஆடணும்.
நாம எல்லோரும் சமம். என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் உயிர் வணக்கங்கள். இதுவரைக்கும் ஆடியோ லான்ச் மேடையில மீட் பண்ணிருப்போம். இப்போ நாம மீட் பண்றது அரசியல் மேடை.
பெரியார் எங்கள் கொள்கை தலைவர். இதை சொன்னவுடனே ஒரு கூட்டம் பெயிண்ட் டப்பாவை தூக்கிட்டு கிளம்பிடுவாங்க. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கையிலும் நாங்கள் தலையிட போவதும் இல்லை.
அறிஞர் அண்ணா கூறிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் எங்களின் நிலைப்பாடு. ஆனாலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமீக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகிய எல்லாவற்றையும் நாம் முன்னெடுத்து செல்ல போகிறோம்.