கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா ஆகியோரை 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்ய இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
நெவில் சில்வா இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி, முறைப்பாடு ஒன்று தொடர்பில் பக்கச்சார்பாக செயற்பட்டு இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 14 கோடி ரூபா பெறுமதியான பொருட்களைப் பலாத்காரமாகப் பெற்றுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நெவில் சில்வா கடந்த 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.