வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் நேற்றுமுன்தினம் அத்துமீறித் தகராறில் ஈடுபட்ட அரச அலுவலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகளில் கடந்த காலங்களில் தொடர்புபட்டிருந்த அவர், குறித்த பாடசாலையின் விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்ததும் இவ்வாறு அத்துமீறி உள்நுழைந்து அதிபரையும், ஆசிரியர்களையும் தகாத வார்த்தைகளால் ஏசினார் என்றும், வன்முறையில் ஈடுபட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதுடன், சந்தேகநபரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் நேற்று இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.