நீதிபதிகளால் அவர்களுக்காகப் பேசமுடியாது என்பதை நன்கு அறிந்துகொண்டு, பாராளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையின்கீழ் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடும் போக்கு நீதிமன்ற சுயாதீனத்துவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரின்ஸி அர்ஸகுலரத்ன, உபுல் ஜயசூரிய, ஜயம்பதி விக்ரமரத்ன, ஜெஃப்ரி அழகரத்னம், தினால் பிலிப்ஸ் மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் கையெழுத்திட்டு வியாழக்கிழமை (14) வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாகவே மேற்கண்டவாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
‘நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள குறிப்பிட்ட சில வழக்குகளுடன் தொடர்புடைய நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளை அண்மையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கோள் காண்பித்த சம்பவங்கள் குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகின்றோம்’ என்று சட்டத்தரணிகள் கூட்டிணைவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 8 ஆம் திகதி தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஹொரணை நீதிமன்ற அதிகாரி தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து, கடந்த மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் முல்லைத்தீவு நீதிவான் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து மற்றும் நீதிபதியொருவரின் பெயரைக் குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்து என்பனவற்றை அவ்வறிக்கையில் மேற்கோள்காண்பித்துள்ள அக்கூட்டிணைவு உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளை பாராளுமன்றத்துக்கு அழைத்து கேள்வி எழுப்பவேண்டும் என விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘இச்சம்பவங்கள் தமது கடமையை சுதந்திரமானதும், சுயாதீனமானதுமான முறையில் முன்னெடுப்பதற்கு நீதிமன்றக்கட்டமைப்பு கொண்டிருக்கும் இயலுமையைத் திட்டமிட்டவகையில் கட்டுப்படுத்தும் போக்கு மேலோங்கிவருவதையே புலப்படுத்துகின்றன. நீதிபதிகளால் அவர்களுக்காகப் பேசமுடியாது என்பதை நன்கு அறிந்துகொண்டு, பாராளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையின்கீழ் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்ற சுயாதீனத்துவத்தை அவமதிக்கும் செயலாகும்’ என்றும் சட்டத்தரணிகள் கூட்டிணைவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு அவசியமான நீதிக்கட்டமைப்பின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்குரிய அனைத்துத் தலையீடுகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று சட்டத்தரணிகள் கூட்டிணைவு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.