குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான வழக்கினை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துற்குள்ளே எழுப்பப்பட்ட இனவெறிக் கூச்சல்களுக்கு அப்பால், அதிகாரத் தரப்பினால், நேரடியாகவும் மறைமுகமாகவும் நீதிபதி மீது பிரயோகிக்கப்பட்ட உளவியல் ரீதியான அழுத்தங்களே, அவரை இந்த முடிவுக்கு இட்டு சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தமது கடமையை நேர்மையுடன் செய்ய விரும்பும் சகல நீதிபதிகளுக்கும் இது ஓர் சிவப்பு எச்சரிக்கை என்பதை, அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமைக்குள் முழு நாடும் தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் என்பது நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும், எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.