நிதியின்மையால் கைவிடப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு!

கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிதியில்லை என மாவட்ட செயலயத்தினால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் இதுவரை நிதியை விடுவிக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் நேற்று நீதிமன்றில் அறிவித்ததாக சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் நிதியை விடுவிப்பதை தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி குறிப்பிடுகின்றார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையில், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர் மற்றும் வீ.எஸ். நிரஞ்சன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகியிருந்தனர்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்கு சுமார் 5.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்குப் பதிலாக கணக்காளர், 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில்,

“கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து நீதவான் விசாரணைக்கான மதிப்பீடு” என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், 5,663,480.00 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி தற்காலிகமாக அகழ்வுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டபோது, சுமார் 2.5 மில்லியன் ரூபாய் நிதி எஞ்சியிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்திருந்தார்.

புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி 2023 நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங்கள் மீட்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *