நல்ல கனவுகள் அனைத்தும் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன் 2025 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கின்றோம்: ஜனாதிபதி அனுர

நாடும், நாட்டு மக்களும் பல தசாப்த காலமாக கண்ட நல்ல கனவுகள் அனைத்தும் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன் 2025 ஆம் ஆண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம். என ஜனாதிபதி அனுரகுமார திஸ்சனாயக்கா தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நாம் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை சரிவர செய்வதற்காக அன்றிலிருந்து அரசியல் கலாச்சாரத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்து துரிதமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிற்றல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம். அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்வை” பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி,புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது.

விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.

தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *