நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை கடுமையாக விமர்சித்த கருணாஸ்:

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். அதன்படி இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது வந்துள்ளது. பாதரசம் எதிலும் ஒட்டாதது.. மக்களிடம் எப்போதும் ஒட்டப்போவதும் கிடையாது. நஞ்சு கக்கக்கூடிய கொடிய திரவம் தான் இந்த பாதரசம். தங்கத்தையும் வெள்ளியையும் இந்த பாதரசம் உருக்கும், உருக்குலைத்து விடும்.. அதேபோல நன்றாக இருக்கும் நாட்டை இந்த பாதரசம் உருக்குலைத்து விடும். 

இதுபோன்ற பாதரசத்தை உருவாக்கிப் பாதுகாப்பு கொடுப்பதே பாசிசங்கள் தான் என்பதை நீங்கள் அத்தனை பேரும் உணர வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரன் அதேபோல இந்த மாநாட்டில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரன், “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தொடங்கிப் பல உரிமைகளைத் தொடர்ந்து பெற்றுக் கொடுத்து, மாநில உரிமைகளைக் காப்பாற்றி வருகிறார் நமது முதல்வர். இப்போது மும்மொழி கொள்கை என்கிறார்.. வட இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது தமிழ் விருப்ப மொழியாக இருக்கிறதா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். 

தேர்தலில் பிரசாந்த் கிஷோரை கொண்டு வந்து திமுக வென்றதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அப்போது தேர்தல் சமயத்தில் எதாவது ஒரு கூட்டத்தில் பொது மேடையில் பிரசாந்த் கிஷோரை பார்த்து இருக்கிறோமா? அவரை மேடையில் பேச வைத்திருக்கிறோமா? மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது மாநில உரிமை குறித்து என்னவெல்லாம் பேசினார்.. அதைத்தான் இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் பேசுகிறார். மோடி தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால்.. தான் முதல்வராக இருந்த போது என்ன பேசினோம் என்பதை உணர்ந்தால் தனது பாதையை மாற்றிக்கொள்வார்” என்றார். 

பின்னணி முன்னதாக தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், “நிதியைக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால், இவர்கள்.. அதுதான் நமது பாசிசமும், பாயாசமும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி ஹேஷ்டேக் போட்டு விளையாடுகிறார்கள்.. இதை நாம் நம்ப வேண்டுமாம்.. What Bro.. It’s very Wrong Bro.. இது ஏமாற்று வேலை என்பது மக்களுக்குத் தெரியும்” எனப் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சை விமர்சிக்கும் வகையிலேயே கருணாஸ் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *