காங்கேசன்துறை – தையிட்டி, திஸ்ஸ விகாரை பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என்று புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தின் முழு முயற்சியுடன் திஸ்ஸ விகாரை பகுதியில் மற்றொரு சட்டவிரோத கட்டிடம் இன்று (23) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் மிக இரகசியமான வகையில் வேறுசில சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும்,. இராணுவத்தினர் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அதற்கு பதில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
அத்தோடு “தான் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட தாகவும், அவ்வாறான சட்டவிரோத கட்டிடங்கள் எவையும் இல்லை” என்றும் அவர் கூறியிருந்தார். அப்படியாயின் யாழ் பதில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் இதற்கு உடந்தையானவரா…? பெளத்த பேரினவாதிகளோடு சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் செய்துள்ளாரா…? என்ற கேள்வி மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தால் அமைக்கப்பட்டு வந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டிடம் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மத வழிபாடுகளுக்குப் பின்னர் பிக்குகள் தங்குவதற்காக மடாலயமாக கையளிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இந்த நிலையில் அப்பகுதியில் காணி உரிமையாளர்கள், ஊரவர்களோடு செல்வராசா கஜேந்திரனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையை காண முடிந்தது.
இதில் வேடிக்கையும், மனவருத்தத்தை தருவதும் என்னவென்றால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கும் நிலையில், அக் கட்சிகள், சுயேட்சை குளுக்களை சேர்ந்த தலா 10 பேர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலுமே 1750 பேருக்கும் மேற்பட்டவர்களை கொண்ட மாபெரும் போராட்டமாக மாறியிருக்கும் என்பதோடு, அரசாங்க மட்டத்தில் கவனயீர்ப்பையும் பெற்றிருக்கும். ஆனால் அதற்கெல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு நேரமும் இல்லை, அக்கறையும் இல்லை என்பதே உண்மை நிலை.

