தமிழ் பொது வேட்பாளராக நான் களமிறங்கியது ஏன் – அரியநேந்திரன் விளக்கம்:

“தமிழ் பொது வேட்பாளராக நான் களமிறங்கியது வெற்றிபெற அல்ல. எம்மால் வெற்றிபெற முடியாதென்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தென்னிலங்கையில் உருவாகும் ஒன்பதாவது நிறைவேற்றி அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கும் தேவை எமக்குள்ளது.”இவ்வாறு தமிழ் பொது வேட்பாளராக களமறிங்கியுள்ள பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

.”தமிழரசுக் கட்சி எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை வெறும் வதந்திகள்தான். நாளைய தினம் அவர்கள் கூடி எடுக்கும் தீர்மானத்தின் பின்னர்தான் அது தெரியும். அது கட்சியின் நிலைப்பாடு.

இலங்கையின் ஜனாதிபதியாக நான் வரபோவதில்லை. ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும் தென்னிலங்கை தலைமைகளுக்கும் எடுத்துரைக்க வேண்டிய தேவை உள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக 8 ஜனாதிபதிகள் இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு இருந்தன. ஆனால், எவரும் தமிழர்களுக்கான தீர்வை வழங்கவில்லை என்பதுடன், ஏமாற்றியே வந்துள்ளனர்.

9ஆவது ஜனாதிபதியிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றமடை தயார் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் அவசியம் என்பதை எடுத்துரைக்கவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் தேவை ஏற்பட்டது.

தமது அரசியல் தீர்வாக சமஷ்டி, சுயாட்சி, தமிழீழம் உட்பட பல தீர்மானங்களை தமிழனம் 1976ஆம் ஆண்டே நிறைவேற்றிவிட்டது.

இந்தத் தேர்தலில் நான் ஒரு குறியீடாக மாத்திரமே போட்டியிடுகிறேன்.எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து வெளியீடு செய்வது பொது சபைதான். அவர்கள் அந்தப் பணியை செய்வார்கள்.

செப்டம்பர் 22ஆம் திகதிவரைதான் எனது பணி இடம்பெறும் அதன்பின் பொது சபைத்தான் தமிழ் மக்களின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும். ஆகவே தொடர்ந்து ஏமாற்றமடைந்துவரும் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமது ஒற்றுமையை காட்ட வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *