இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜரை கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பகிரங்க கோரிக்கையை முன் வைக்கின்றோம்.
இதுவரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறவில்லை.
இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு குறித்த ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும் ஜக்கியமின்மையுமே காரணமாகும்.
இந்நிலையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்திய பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையுமென தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வலியுறுத்துகின்றார்கள்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதனை மறுக்க முடியாத ஒன்று.
எனவே தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
இதுவே, தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு செய்கின்ற அரசியல் கடமையாகும்.
அவ்வகையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் இந்திய பிரதமரிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கையானது,
‘இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என்பதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.