செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .
“செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இது போன்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என பலர் விமர்சித்துள்ளனர்.
ChatGPTஎன்னும் அரட்டை செயலியை உருவாக்கிய OpenAI இன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind)-ன் தலைமை நிர்வாகி டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (Demis Hassabis) மற்றும் Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டரியோ அமோடி (Dario Amodei) ஆகியோர் செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் இந்த பதிவை ஆதரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவினால் என்ன மாதிரியான பேரிடர்கள் ஏற்படும் என்பது குறித்த சில சூழ்நிலைகளை செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.
• செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல மென்பொருட்கள் மற்றும் மிண்அணு கருவிகளை பெரும் ஆயுதங்களாக சமூக விரோத கும்பல்கள் மற்றும் சில நாடுகளின் அரசுகள் பயன்படுத்தலாம்.
• செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள், சமூகத்தை சீர்குலைத்து “பலர் ஒன்றிணைந்து முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும்.”
• செயற்கை நுண்ணறிவின் சக்தி, மிகக்குறைவான கைகளில் அதிக அளவில் குவிந்து, உலக அரசுகள் பொதுமக்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கத் தொடங்கலாம். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவவும் உதவும்.
•Wall-E திரைப்படத்தில் காட்டப்பட்டது போல், மனிதர்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும்.
அதிபுத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக்கான மையத்தின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான யோசுவா பெங்கியோவும் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்துள்ளார்.
டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், பேராசிரியர் யோசுவா பெங்கியோ, மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் யான் லீகுன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அவர்களின் அற்புதமான ஆரம்பகட்ட பங்களிப்புக்களுக்காக செயற்கை நுண்ணறிவின் தந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் மூவரும் கூட்டாக 2018-ம் ஆண்டின் டூரிங் விருதை வென்றனர். இது கணினி அறிவியலில் ஒருவரின் மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
ஆனால் மெட்டாவில் பணிபுரியும் பேராசிரியர் LeCun, மனித அழிவு குறித்த இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவைகளாகவே இருக்கின்றன என்ற கருத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
உண்மைகளுக்கு ஊறு விளைவிக்கும் தன்மை
இதே போல் செயற்கை நுண்ணறிவினால் மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதை பல வல்லுநர்கள் முழுமையாக ஏற்கவில்லை. இது போன்ற அச்சம் நம்பக்கத்தகுந்த வகையில் இல்லை என்கின்றனர் அவர்கள். ஏற்கெனவே நாம் எதிர்கொண்டு வரும் சவால்களை முறியடிப்பதற்கான பாதையிலிருந்து இது போன்ற அச்சங்கள் நமது கவனத்தை திசைதிருப்புவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானியான அரவிந்த் நாராயணன், அறிவியல் புனைகதை போன்ற பேரழிவுக் காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என்று பிபிசியிடம் கூறினார்: “தற்போதைய செயற்கை நுண்ணறிவின் திறன்கள், இது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்துமளவுக்கு பெரிய அளவில் ஆற்றல் பெற்றவையாக இல்லை என்கிறார் அவர். மேலும், இது போன்ற அதீத அச்ச உணர்வுகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படப் போகும் சிறிய அளவிலான ஆபத்துக்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களின் கவனம் திசை திருப்பப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
ஆக்ஸ்போர்டின் இன்ஸ்டிடியூட் ஃபார் எதிக்ஸின் மூத்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் எலிசபெத் ரெனிரிஸ், செயற்கை நுண்ணறிவினால் நிகழ்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள், மென்பொருட்களும், கருவிகளும் தாமாகவே முடிவெடுக்கும் அளவைப் பரவலாக்கும். அது பாரபட்சமானதாக, வெறுப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கலாம். அதே நேரம் நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள் எடுக்கப்படும் ஆபத்தும் உள்ளது,” என்று அவர் கூறினார். அவை, “தவறான தகவல்களின் அளவு மற்றும் பரவலில் மிக மோசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு இதன் மூலம் எதார்த்தத்தை உடைத்து, பொது நம்பிக்கையை சீர்குலைக்கும்.”
பல செயற்கை நுண்ணறிவு கருவிகள், மனிதர்களின் எண்ண ஓட்டங்களை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுக்கின்றன. அவற்றின் உள்ளடக்கம், உரைகள், கலை மற்றும் இசைக்கான முன்னுரிமைகள் என அனைத்தும், இக்கருவிகளை பயன்படுத்தி வருபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒட்டிய அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அதனால் அவை செயல்படும் விதமும் அதன் அடிப்படையிலேயே இருக்கும்.
இந்த செயற்கை நுண்ணறிவு என்பது பொதுமக்களின் பெரும் அளவிலான செல்வங்களை சொற்ப எண்ணிக்கையிலான தனியார் நிறுவனங்களுக்கு மாற்றும் செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.
ஆனால் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் டான் ஹென்ட்ரிக்ஸ், தற்காலத்தில் நிலவும் ஆபத்துகள் மற்றும் எதிர்கால அபாயங்களை சம்பந்தமற்ற விஷயங்களாக பாவித்து அணுகக்கூடாது என பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார்.
“தற்போதைய சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, பிற்காலத்தில் ஏற்படும் பல ஆபத்துக்களை எதிர்கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
மனிதனை மிஞ்சிய அறிவினால் ஆபத்து
அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை உடனடியாகத் தடுத்தது நிறுத்தவேண்டும் என கடந்த மார்ச் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் உள்ளிட்ட வல்லுநர்கள் கூட்டாக கையெழுத்திட்டு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவினால் மனித குலத்துக்கு ஆபத்து என்ற செய்தியின் மீது ஊடகங்கள் அதிக அளவில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.
அந்த கடிதத்தில், “செயற்கையாக உருவாக்கப்படும் மனங்கள் (non human minds)ஒரு கட்டத்தில் மனிதர்களை விட திறமை மிக்கவைகளாக மாறி, அதிக எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தையே அழித்துவிடும் அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மாறாக, தற்போதைய பிரச்சாரங்கள் தெளிவான வேண்டுகோளை முன்வைக்கின்றன. அவற்றின் படி, உடனடியாக இந்த ஆபத்துகள் குறித்த ஆலோசனையை அனைவரும் தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளையும், அணு ஆயுதப் போரால் ஏற்படும் அபாயத்துகளையும் ஒப்பிடுகிறது. OpenAI, தனத வலைப்பதிவு ஒன்றில், அணு சக்தியைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சர்வதேச அணு சக்தி நிறுவனம் செயல்படுவதைப் போலவே, செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தவும் உலக அளவில் ஒரு கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இருவரும் அண்மையில் பிரிட்டன் பிரதமருடன் செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை பற்றி விவாதித்தவர்களில் இடம்பெற்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரிஷி சூனக், செயற்கை நுண்ணறிவினால் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.
“முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செயல்பட உதவுவது, நோயெதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பது போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் உதவி அளப்பரிய அளவில் இருந்தாலும், அதை பாதுகாப்புடன் பயன்படுத்தும் தேவை இருப்பதை மறுக்கமுடியாது,” என்றார் அவர்.