சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க இலங்கை – பாக்கிஸ்தான் அவதானம்:

பாக்கிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாக்கிஸ்தானில் உள்ள பௌத்த மரபுரிமை ஸ்தலங்களை இலங்கையின் பௌத்த பீடங்களுக்கு வழங்குதல், போதைப்பொருள் கடத்தலை காரணமாக கொண்டு பாக்கிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகளை தளர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்காக பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாஹிம் அஜீஸ், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத்தை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன.

பாக்கிஸ்தானில் உள்ள பௌத்த மரபுரிமை ஸ்தலங்களை இலங்கையின் பௌத்த பீடங்களுக்கு பொறுப்பளிப்பது தொடர்பான யோசனையை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதே வேளை இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் யோசனையையும் பாக்கிஸ்தான் முன்வைத்துள்ளது. 

குறிப்பாக வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி உட்பட நவீன உற்பத்திகளை ஏற்றுமதி செய்து இரு தரப்புக்கும் நன்மைகள் ஏற்படும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது பாக்கிஸ்தானின் கோரிக்கையாக உள்ளது.

அதே போன்று பாக்கிஸ்தானியர்களுக்கு இலங்கையில் வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கு தடையாக விசா விதிமுறைகள் உள்ளன.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த நிலைமை கடினமாக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்கள் பாக்கிஸ்தான் ஊடாகவே முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டு இலங்கையில் விசா விதிமுறைகள் கடினமாக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலை காரணம் காட்டி பாக்கிஸ்தானியர்களுக்கு விசா விதிமுறைகள் கடினமாக்கப்பட்டுள்ளமை கவலைக்குறிய விடயமாகும்.

எனவே  பாக்கிஸ்தானியர்களுக்கு இலங்கையில் சுதந்திரமாக முதலீடுகளை செய்ய ஏற்புடைய சூழலையும் உருவாக்கவும் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் ஊடாக மாத்திரமன்றி இந்தியா மற்றும் ஈரான் ஊடாகவும் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுகின்ற விடயமும் இதன் போது தெரிவிக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *