சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது முறையல்ல:

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சுகாதார சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுகாதார சேவையாளர்கள் அறிவித்துள்ளமை  முறையற்றதாகும். 

பொதுமக்களை   அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதை  தவிர்த்துக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04)  நடைபெற்ற அமர்வின் போது  விசேட  கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரச சேவையாளர்களின்  சம்பளம்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக  2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட  சுகாதார சேவைகளின் மேல் மற்றும் கீழ் நிலை உத்தியோகஸ்த்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை நன்கு அறிந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்   ஆலோசகராக செயற்பட்ட சமன் ரத்னபிரிய  பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சம்பள முரண்பாடு மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ‘சம்பள அதிகரிப்பு தொடர்பில்  சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்’  என்று தன்னிச்சையான முறையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிராக அன்று எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

பொருளாதார பாதிப்பினால்  சுகாதார சேவையாளர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நன்கு அறிவோம். பெரும்பாலான வைத்தியர்கள், தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

பாரிய நெருக்கடிக்கு மத்தியில் வைத்தியர்கள்  மக்களுக்கு சேவையாற்றினார்கள். இவர்களின் அர்ப்பணிப்பான சேவையை கருத்திற் கொண்டு இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில்   அதிகளவில் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். 

வைத்திய   சேவையின்   முதல் நிலை வைத்தியரின்   அடிப்படை சம்பளம் 39860 ரூபாவினாலும்,  2 ஆம் தர  வைத்தியரின் அடிப்படை  சம்பளம்  43605 ரூபாவினாலும், 1 ஆம் தர வைத்தியரின் அடிப்படை சம்பளம்  53865 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாதியர் சேவையாளர்களின் சம்பளம் தர அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச சேவையாளர்கள் உட்பட சுகாதார சேவையாளர்களின்  சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  உழைக்கும் போது செலுத்தும் வரியிலும் நிவாரமளிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே ஒரு தரப்பினரது  குறுகிய அரசியல் நோக்கத்துக்கு   பலியாக வேண்டாம் என்று  சுகாதார சேவையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சுகாதார அமைச்சின் மீதான விவாதம் நாளை இடம்பெறவுள்ள நிலையில் தான்  நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில்  ஈடுபட அழைத்து விடுத்துள்ளனர். இது நியாயமற்றதாகும்.

பிரச்சினைகளுக்கு  பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பதற்கு தயாராகவுள்ளோம். ஆகவே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் என்று வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையாளர்களிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *