தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பதினருக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தோடு,
என்னுடைய ஒரே ஒரு நண்பர் சம்பந்தன் எம்முடன் இல்லை. அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து விட்டார். நாங்கள் இக்கட்டான நிலைமையில் ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அவர் பாரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். அவர் இலங்கையினுடைய இறையாண்மைக்காக பாடுபட்டிருக்கின்றார். நீங்கள் இந்த நாட்டை பிரிக்கிறீர்களா என என்னிடம் கேட்டார். என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.