கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபை தொடர்பில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
ஒரு சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் காரணமாக, குறித்த சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மே 06 ஆம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தினத்தில் நடத்துவதைத் தடுத்து இதற்கு முன்னதாக நீதிமன்று இடைக்கால தடையுத்தரவை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிராகரிக்கப்பட்ட குறித்த வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இது தொடர்பில் முன்கொணர்வு மனுவொன்றை சட்ட மாஅதிபர் முன்வைத்தமைக்கு அமைய குறித்த மனுதாரர்களால் சமர்பிக்கப்பட்ட குறித்த வழக்கு இன்று (11) எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று (11) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதன்படி, வழக்கு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பான தமது தரப்பில் ஆட்சேபனைகள் எதுவும் முன்வைக்கப்படமாட்டாது என சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமது எழுத்தாணை மனுக்கள் மீதான நடவடிக்கைகளை நிறைவு செய்யும் வகையிலும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளவதற்கும் உரிய தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரினர்.
அந்த விடயங்களின் அடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, அனைத்து உள்ளூராட்சி சபை நிறுவனங்களுக்கான தேர்தலையும் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி மே 06 ஆம் திகதி நடாத்தும் வாய்ப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.