இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிசோராமைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே, ரூ. 6 கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளை தனது பயணப்பொதியில் மறைந்துவைத்து கடத்தியுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப் பெண் சென்னையிலிருந்து நேற்று அதிகாலை வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, அவரது கடவுச்சீட்டை பரிசோதனைக்குட்படுத்தியதில், அவர் இதற்கு முன்பு 3 முறை நாட்டுக்கு வருகை தந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதையடுத்து சந்தேகமடைந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை செய்த அதே வேளை, அவர் கொண்டுவந்திருந்த பயணப் பொதியையும் தீவிரமாக சோதனையிட்ட நிலையிலேயே மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.