கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில் 125 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த உழவர்களில் பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்திருக்கிறது.

இதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (17-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “வட ஆற்காட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்ட போது அங்கு ஒரு தொழிற்சாலை கூட கிடையாது. தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலைகள் உருவாக்க முடியும். அதனால் தான் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்தாமல் தொழிற்சாலையை எங்கு அமைப்பது?

125 நாட்கள் சில பேர் ஊரில் இல்லாத ஆட்களை கொண்டு வந்து போராட்டத்தை நடத்துகின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து இங்கு போராட்டம் நடத்துகின்றனர். அரசாங்கம் எந்தவித பணியையும் செய்யக்கூடாது என்று சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகளை வஞ்சிப்பது அரசின் நோக்கம் கிடையாது. சிலர் தூண்டுதலின் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 7 பேரை விடுவிக்க கோரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்தினரும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதில் அவர்கள், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தவறை செய்யமாட்டோம் என்றும் கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அவர்கள் வைத்த அந்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *