காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளோம்: சட்டத்தரணி தற்பரன்

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார்.

காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்று (26) ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை 16,966 பேர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 3,742 பேர் படையினர் மற்றும் பொலிஸார் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் 6,449 பேரின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 10,517 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

2000 ஆம் ஆண்டிற்கு பின்பு  7,406 பேரும், 2000 ஆம் ஆண்டிற்குப் முன்னர் 9,560 பேரும் காணாமல் போயுள்ளதாக ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதிலே 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல்போன 7,406 பேரில் 6,449 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளது.

நிறைவு பெற்ற விசாரணைகளில் இருந்து 19 பேர் உயிரோடு இருப்பதனையும் கண்டறிந்துள்ளோம். அவர்களது விபரங்களை 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இணைத்துள்ளோம். அவை விரைவில் வெளிவரும்.

அதேவேளை 2,604 பேர் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை  பெற்றுள்ளனர்.  407 பேர் மரணச் சான்றிதழிற்கான சிபார்சை பெற்றுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட  இடைக்கால நிவாரணத்திற்கு 4,408 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *