கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகத்தை கைப்பற்ற முனைந்தவர்களால் அமைதியின்மை:

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையினால் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படுத்தினர். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்தபோது இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதான சுடரினை ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடரேற்றியதையடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், அங்கு தொடர்ந்து 9 ஆண்டுகளாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தும் இந்த மாவீரர் துயிலும் இல்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு மாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாகத் தெரிவை நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வாகத் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பினது அழைப்பின் பேரில் சென்ற மக்களுக்கு அவ்வேளை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸார் அங்கு சென்றனர். 

அப்பகுதியில் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் எனவும் தெரிவித்து அங்கிருந்த மக்களை வெளியேற்றினர்.

படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிஸார் அமைதியின்மையை கட்டுப்படுத்தினர். 

இதேவேளை, குறித்த மாவீரர் துயிலுமில்ல வளாகத்துக்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தல் போஸ்டரை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தனர். 

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா கூறுகையில், மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும் நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு செயற்படுவதாக தெரிவித்தார்.

அதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இன்று சிறிதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரிகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறிதரனின் அரசியலுக்குள் துயிலும் இல்லங்களை அனுமதிக்க முடியாது.

சிறிதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார். அரசியலுக்குள் சிக்கியுள்ள துயிலும் இல்லங்களை மக்கள்மயப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

மாவீரர் துயிலும் இல்லங்களை அரசியல்மயப்படுத்தி, முன்னாள் போராளிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *